يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (1) நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான் |
قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ ۚ وَاللَّهُ مَوْلَاكُمْ ۖ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ (2) ஆகவே, உங்கள் அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான் |
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَىٰ بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ ۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَٰذَا ۖ قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ (3) (நம்) நபி தன் மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்து விட்டார். அதை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி ‘‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர் “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார் |
إِن تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا ۖ وَإِن تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ ۖ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَٰلِكَ ظَهِيرٌ (4) (நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் அது உங்களுக்கே நன்று. ஏனென்றால், உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள் |
عَسَىٰ رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنكُنَّ مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ تَائِبَاتٍ عَابِدَاتٍ سَائِحَاتٍ ثَيِّبَاتٍ وَأَبْكَارًا (5) நபி உங்களை ‘தலாக்' கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்களை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாக, நம்பிக்கைக் கொண்டவர்களாக, (இறைவனுக்குப்) பயந்து (நம் நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக்கூடியவர்களாக, (பாவத்தைவிட்டு) விலகியவர்களாக, (இறைவனை) வணங்குபவர்களாக, நோன்பு நோற்பவர்களாக, கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (ஆகவே, இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம், அவருக்கு அல்ல) |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6) நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் (சிலைகளாக இருந்த) கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ (7) (அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) ‘‘நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவற்றுக்குத்தான். (நீங்கள் செய்யாதவற்றுக்கு அல்ல'' என்று கூறப்படும்) |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ ۖ نُورُهُمْ يَسْعَىٰ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (8) நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ அதை உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். (தன்) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். இவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கிவை. எங்கள் குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள் |
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ الْمَصِيرُ (9) நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரிவீராக. அவர்களுடன் நீங்கள் (தயவு தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருப்பீராக. அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடமாகும் |
ضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَامْرَأَتَ لُوطٍ ۖ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ (10) நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது |
وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ (11) நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள் |
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ (12) (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள் |