يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (1) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்பாக(ப் பேசுவதற்கு) நீங்கள் முந்திக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَن تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنتُمْ لَا تَشْعُرُونَ (2) நம்பிக்கையாளர்களே! (நபி பேசும்பொழுது) நபியுடைய சப்தத்திற்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள். மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் கூச்சலிட்டுச் சப்தமாகப் பேசுவதைப் போல், அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் கூச்சலிட்டுப் பேசாதீர்கள். இதன் காரணமாக உங்கள் நன்மைகள் எல்லாம் அழிந்துவிடக்கூடும். (இதை) நீங்கள் உணர்ந்து கொள்ள முடியாது |
إِنَّ الَّذِينَ يَغُضُّونَ أَصْوَاتَهُمْ عِندَ رَسُولِ اللَّهِ أُولَٰئِكَ الَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَىٰ ۚ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ (3) எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பாக (மரியாதைக்காகத்) தங்கள் சப்தத்தைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களை நிச்சயமாக அல்லாஹ் சோதனை செய்து இறையச்சத்திற்கு எடுத்துக் கொண்டான். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; மகத்தான கூலியும் உண்டு |
إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ (4) (நபியே!) எவர்கள் (நீர் வசித்திருக்கும்) அறைக்கு முன்பாக நின்று கொண்டு உம்மை(க் கூச்சலிட்டு)ச் சப்தமிட்டு அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் (மார்க்கத்தை) விளங்காதவர்களே |
وَلَوْ أَنَّهُمْ صَبَرُوا حَتَّىٰ تَخْرُجَ إِلَيْهِمْ لَكَانَ خَيْرًا لَّهُمْ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (5) (உமது அறையிலிருந்து) நீர் வெளிப்பட்டு அவர்களிடம் நீர் வரும் வரை அவர்கள் பொறுத்திருந்தால், அது அவர்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6) நம்பிக்கையாளர்களே! ஒரு விஷமி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும் |
وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ ۚ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ ۚ أُولَٰئِكَ هُمُ الرَّاشِدُونَ (7) (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிடம் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். பல விஷயங்களில் அவர் உங்களுக்கு கட்டுப்படுவதென்றால், நிச்சயமாக நீங்கள்தான் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். ஆயினும், அல்லாஹ் நம்பிக்கையின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து, உங்கள் உள்ளங்களிலும் அதையே அழகாக்கியும் வைத்தான். மேலும், நிராகரிப்பையும், பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கிவைத்தான் இத்தகையவர்கள்தான் நேரான வழியில் இருக்கின்றனர் |
فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةً ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (8) (மிகச்சிறந்த இத்தன்மைகளை அடைவது) அல்லாஹ்வுடைய அருளும், (அவனுடைய) கிருபையுமாகும். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான் |
وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (9) நம்பிக்கையாளர்களிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களை சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது வரம்பு மீறி அநியாயம் செய்தால், அநியாயம் செய்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும் வரை, அவர்களிடம் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விரு வகுப்பார்களுக்கிடையே சமாதானம் செய்து, நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான் |
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (10) நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰ أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ (11) நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ (12) நம்பிக்கையாளர்களே! அதிகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாகச் சந்தேகங்களில் சில பாவமானவையாக இருக்கின்றன. (எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேசவேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே. இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து விலகுபவர்களை) அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான் |
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13) மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான் |
۞ قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا وَلَٰكِن قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ (14) (நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக் கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின், உங்கள் நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்து விடமாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான் |
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ (15) (உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து போர் புரிவார்கள். இவர்கள்தான் (தங்கள் நம்பிக்கையில்) உண்மையானவர்கள் |
قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (16) (நபியே!) கூறுவீராக: (‘‘நீங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று) உங்கள் வழிபாட்டை(யும், பக்தியையும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிந்தவன். (தவிர, மற்ற) எல்லா பொருள்களையுமே அல்லாஹ் நன்கறிந்தவன் |
يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا ۖ قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُم ۖ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ (17) (நபியே!) அவர்கள் இஸ்லாமில் சேர்ந்ததன் காரணமாக உம்மீது உபகாரம் செய்து விட்டதாக கருதுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் இஸ்லாமில் சேர்ந்ததனால் என்மீது உபகாரம் செய்து விட்டதாக எண்ணாதீர்கள். மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகும்படி செய்ததன் காரணமாக அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான். நீங்கள் (உங்கள் நம்பிக்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் (இதை நன்கறிந்து கொள்வீர்கள்) |
إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ (18) நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை நன்கறிவான். ஆகவே, நீங்கள் செய்பவற்றையும் அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான் |