يَسْأَلُونَكَ عَنِ الْأَنفَالِ ۖ قُلِ الْأَنفَالُ لِلَّهِ وَالرَّسُولِ ۖ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ ۖ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ (1) (நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள் |
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள் |
الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (3) அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள் |
أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (4) இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு |
كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِن بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ (5) (நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே |
يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنظُرُونَ (6) (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும் |
وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ (7) (எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்து விடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்து விடவே நாடினான் |
لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (8) பாவிகள் வெறுத்தபோதிலும் இறுதியில் பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்(டவே நா)டினான் |
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ (9) (உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான் |
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ ۚ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِندِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (10) உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான் |
إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (11) (நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களை சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான் |
إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا ۚ سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ (12) (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள் |
ذَٰلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ ۚ وَمَن يُشَاقِقِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (13) இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான் |
ذَٰلِكُمْ فَذُوقُوهُ وَأَنَّ لِلْكَافِرِينَ عَذَابَ النَّارِ (14) (நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا زَحْفًا فَلَا تُوَلُّوهُمُ الْأَدْبَارَ (15) நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள் |
وَمَن يُوَلِّهِمْ يَوْمَئِذٍ دُبُرَهُ إِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ أَوْ مُتَحَيِّزًا إِلَىٰ فِئَةٍ فَقَدْ بَاءَ بِغَضَبٍ مِّنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ ۖ وَبِئْسَ الْمَصِيرُ (16) (எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம் |
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَٰكِنَّ اللَّهَ قَتَلَهُمْ ۚ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَٰكِنَّ اللَّهَ رَمَىٰ ۚ وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (17) (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான் |
ذَٰلِكُمْ وَأَنَّ اللَّهَ مُوهِنُ كَيْدِ الْكَافِرِينَ (18) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான் |
إِن تَسْتَفْتِحُوا فَقَدْ جَاءَكُمُ الْفَتْحُ ۖ وَإِن تَنتَهُوا فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَإِن تَعُودُوا نَعُدْ وَلَن تُغْنِيَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ (19) (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنتُمْ تَسْمَعُونَ (20) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள் |
وَلَا تَكُونُوا كَالَّذِينَ قَالُوا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُونَ (21) (நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம் |
۞ إِنَّ شَرَّ الدَّوَابِّ عِندَ اللَّهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِينَ لَا يَعْقِلُونَ (22) நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான் |
وَلَوْ عَلِمَ اللَّهُ فِيهِمْ خَيْرًا لَّأَسْمَعَهُمْ ۖ وَلَوْ أَسْمَعَهُمْ لَتَوَلَّوا وَّهُم مُّعْرِضُونَ (23) அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ ۖ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ (24) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் |
وَاتَّقُوا فِتْنَةً لَّا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنكُمْ خَاصَّةً ۖ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (25) நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் |
وَاذْكُرُوا إِذْ أَنتُمْ قَلِيلٌ مُّسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَن يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُم بِنَصْرِهِ وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (26) நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ (27) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள் |
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ (28) மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَتَّقُوا اللَّهَ يَجْعَل لَّكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ (29) நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான் |
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (30) (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன் |
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَٰذَا ۙ إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ (31) நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர் |
وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِن كَانَ هَٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِندِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ (32) மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக |
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنتَ فِيهِمْ ۚ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ (33) ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான் |
وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوا أَوْلِيَاءَهُ ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ (34) (இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள் |
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِندَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً ۚ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ (35) அந்த அல்லாஹ்வின் வீட்டில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே, மறுமையில்) ‘‘உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' (என்றே கூறப்படும்) |
إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنفِقُونَ أَمْوَالَهُمْ لِيَصُدُّوا عَن سَبِيلِ اللَّهِ ۚ فَسَيُنفِقُونَهَا ثُمَّ تَكُونُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُونَ ۗ وَالَّذِينَ كَفَرُوا إِلَىٰ جَهَنَّمَ يُحْشَرُونَ (36) நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள் |
لِيَمِيزَ اللَّهُ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضَهُ عَلَىٰ بَعْضٍ فَيَرْكُمَهُ جَمِيعًا فَيَجْعَلَهُ فِي جَهَنَّمَ ۚ أُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ (37) அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் |
قُل لِّلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ وَإِن يَعُودُوا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْأَوَّلِينَ (38) (நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்) |
وَقَاتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ ۚ فَإِنِ انتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ (39) (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான் |
وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ ۚ نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ (40) (இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன் |
۞ وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُمْ آمَنتُم بِاللَّهِ وَمَا أَنزَلْنَا عَلَىٰ عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ (41) (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான் |
إِذْ أَنتُم بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُم بِالْعُدْوَةِ الْقُصْوَىٰ وَالرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَاخْتَلَفْتُمْ فِي الْمِيعَادِ ۙ وَلَٰكِن لِّيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَن بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَيَّ عَن بَيِّنَةٍ ۗ وَإِنَّ اللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ (42) நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான் |
إِذْ يُرِيكَهُمُ اللَّهُ فِي مَنَامِكَ قَلِيلًا ۖ وَلَوْ أَرَاكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَلَٰكِنَّ اللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ (43) (நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான் |
وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا ۗ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (44) அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன |
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ (45) நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள் |
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (46) மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் |
وَلَا تَكُونُوا كَالَّذِينَ خَرَجُوا مِن دِيَارِهِم بَطَرًا وَرِئَاءَ النَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ ۚ وَاللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ (47) பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் |
وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنكُمْ إِنِّي أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ ۚ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ (48) ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து ‘‘எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன்'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்குநேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று ‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' என்று கூறினான் |
إِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰؤُلَاءِ دِينُهُمْ ۗ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ (49) (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான் |
وَلَوْ تَرَىٰ إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا ۙ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ (50) வானவர்கள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) ‘‘எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டாமா |
ذَٰلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ (51) (மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதேயில்லை'' (என்றும் கூறுவார்கள்) |
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ ۗ إِنَّ اللَّهَ قَوِيٌّ شَدِيدُ الْعِقَابِ (52) ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான் |
ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ ۙ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ (53) எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான் |
كَدَأْبِ آلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوا ظَالِمِينَ (54) (ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர் |
إِنَّ شَرَّ الدَّوَابِّ عِندَ اللَّهِ الَّذِينَ كَفَرُوا فَهُمْ لَا يُؤْمِنُونَ (55) நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் |
الَّذِينَ عَاهَدتَّ مِنْهُمْ ثُمَّ يَنقُضُونَ عَهْدَهُمْ فِي كُلِّ مَرَّةٍ وَهُمْ لَا يَتَّقُونَ (56) (இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை |
فَإِمَّا تَثْقَفَنَّهُمْ فِي الْحَرْبِ فَشَرِّدْ بِهِم مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ (57) போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம் |
وَإِمَّا تَخَافَنَّ مِن قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَاءٍ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ (58) (உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை |
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا سَبَقُوا ۚ إِنَّهُمْ لَا يُعْجِزُونَ (59) நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது |
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ (60) அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள் |
۞ وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (61) (நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் |
وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ ۚ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ (62) (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான் |
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ ۚ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (63) அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் |
يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ (64) நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன் |
يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ (65) நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும் |
الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (66) எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் |
مَا كَانَ لِنَبِيٍّ أَن يَكُونَ لَهُ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِي الْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ (67) (இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான் |
لَّوْلَا كِتَابٌ مِّنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيمَا أَخَذْتُمْ عَذَابٌ عَظِيمٌ (68) அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும் |
فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ (69) ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான் |
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّمَن فِي أَيْدِيكُم مِّنَ الْأَسْرَىٰ إِن يَعْلَمِ اللَّهُ فِي قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّا أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (70) நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைவிட மிக்க மேலானவற்றை உங்களுக்குக் கொடுத்து உங்கள் குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான் |
وَإِن يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (71) (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான் |
إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَّنَصَرُوا أُولَٰئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجِرُوا مَا لَكُم مِّن وَلَايَتِهِم مِّن شَيْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا ۚ وَإِنِ اسْتَنصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمُ النَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَاقٌ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (72) நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான் |
وَالَّذِينَ كَفَرُوا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ (73) நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே, அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும் |
وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَّنَصَرُوا أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا ۚ لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ (74) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு |
وَالَّذِينَ آمَنُوا مِن بَعْدُ وَهَاجَرُوا وَجَاهَدُوا مَعَكُمْ فَأُولَٰئِكَ مِنكُمْ ۚ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَىٰ بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (75) (இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான் |